புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் புதுத்தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட்-அப்) கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியப் புதுத்தொழில்துறை நிறுவனங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவிலேயே தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் முதலீடுகள் கிடைக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவில் பெண்களால் தொடங்கப்பட்ட புதுத்தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.10,115 கோடி முதலீடு கிடைத்துள்ளது.
இதன் மூலம் அவற்றின் நிலையான வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு புதுத் தொழில் நிறுவனங்கள் 120 கோடி டாலர் நிதி திரட்டியிருந்த நிலையில், 2025ல் அது 110 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
ஆனால், பெண் தொழில்முனைவோர் மீதான அனைத்துலக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் மட்டும் குறையவில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2024ஆம் ஆண்டு மொத்தம் 580 புதுத்தொழில் நிறுவனத் திட்டங்களில் முதலீடுகள் செய்யப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை 407ஆகக் குறைந்துவிட்டது. எனினும், இத்தகைய திட்டங்களுக்கான சராசரி முதலீட்டுத் தொகை அதிகரித்துள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024ல் ஒரு புதுத்தொழில் நிறுவனத்துக்கு 24 லட்சம் டாலர் முதலீடு கிடைத்தது எனில், கடந்த ஆண்டு அத்தொகை 38 லட்சம் டாலராக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொடக்க நிலை நிறுவனங்களுக்கான நிதி 52.8 கோடி டாலரிலிருந்து 57.2 கோடி டாலராக உயர்ந்தது.
முதலீட்டாளர்களின் கவனம் வெறும் வளர்ச்சியை மட்டும் குவிந்திருக்கவில்லை என்றும், நிலையான வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதையே விரும்புகின்றனர் என்றும் சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகிதா பிரசாத் தொடங்கிய ‘கிவா’ ஆபரண நிறுவனம் 6.2 கோடி டாலரையும், நம்ரதா அஸ்தானா தொடங்கிய ‘புளூ தோகை காபி’ நிறுவனம் 2.5 கோடி டாலரையும் நிதியாகப் பெற்றுள்ளதை முதலீட்டாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரம்தான் பெண் தொழில்முனைவோருக்கு விருப்பமான தேர்வாக உள்ளது.
பெங்களூரில் செயல்படும் நிறுவனங்கள் அதிக நிதியும் லாபமும் பெற்றுத்தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் புதுத்தொழில் நிறுவனங்கள் 44.7 கோடி டாலர், குருகிராமில் 11.5 கோடி டாலர், மும்பையில் 11.2 கோடி டாலர் நிதியைத் திரட்டியுள்ளன.
இந்தியாவின் பெண் தொழில்முனைவோரின் ஆதிக்கமும் அனைத்துலகச் சந்தைக்கான அவர்களின் பங்களிப்பும் தொடர்ந்து வளர்ந்து வருவதை புள்ளி விவரங்கள் உறுதி செய்வதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

