புதுடெல்லி: உலக வெற்றியாளர் பட்டம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், இந்திய அரசு தமக்கு வழங்கிய கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை புதுடெல்லியின் ‘கடமைப் பாதை’யில் சனிக்கிழமை (டிசம்பர் 30) போட்டுவிட்டுச் சென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரான போகாட், மல்யுத்த விளையாட்டாளர்கள் நீதிக்காகப் போராடிவரும் வேளையில் இத்தகைய கௌரவங்கள் அர்த்தமற்றவை என்று கடந்த செவ்வாய்க்கிழமை போகாட் கூறியிருந்தார்.
தமது இந்த முடிவை ஒரு கடிதம் மூலமாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று பிரதமர் அலுவலகம் நோக்கிச் சென்ற அவரைக் காவல்துறை தடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை சாலை நடுவே போட்டுவிட்டுச் சென்றார்.
மல்யுத்த வீராங்கனைகள் மூவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு, போகாட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் சாக்ஷி மாலிக் அறிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சு தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “பெண்கள் அதிகாரம், முன்னேற்றம் பற்றிப் பேசும் கவர்ச்சிகர அரசாங்க அறிவிப்புகள் போன்று தங்களது வாழ்க்கை இல்லை,” என்று போகாட் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.