உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் இந்திய இளையர்கள்: மோடி

2 mins read
1813ef08-9d24-4984-a326-955c7ab41f34
பிரதமர் மோடி. - படம்: நியூஸ் ஆன் ஏர்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்திய இளையர்கள் புதுத் தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட்அப்) தொடங்கி, பல்வேறு உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‘தேசிய புதுத் தொழில் தொடங்குவோர்’ தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் குறிக்கோள் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு புரட்சியாக மாறியுள்ளது என்றார்.

இதனால் நாடு முழுவதும் ஒரு புதிய கலாசாரம் வளர்ந்துள்ளது என்றும் புதிது புதிதாகக் கனவு காணும் துணிச்சலுக்காக இளம் கண்டுபிடிப்பாளர்களைப் பாராட்டுவது அவசியம் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

புதுத் தொழில் தொடங்குவதற்கான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட உலகின் மூன்றாவது ஆகப்பெரிய நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது என்றும் இந்திய இளையர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் புதுத் தொழில் நிறுவனங்கள், இந்தியப் பொருளியல், புத்தாக்கக் கட்டமைப்பின் அடித்தளமாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஆபத்துகளை எதிர்கொண்டு துணிச்சலுடன் செயல்படுவதுதான் தொழில்முனைவுக்கு முதல் தகுதி என்றும் இன்றைய உலகில் மாதச் சம்பளத்திற்கு அப்பால் சிந்திப்பவர்கள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 45 விழுக்காட்டுக்கும் அதிகமான புதுத் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தது ஒரு பெண் இயக்குநர் அல்லது பங்குதாரர்கள் உள்ளனர்.

இந்நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் பெண்களின் பங்கு பாராட்டுக்குரியது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைப் பொறுத்தவரை, இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

“புதுத் தொழில் நிறுவனங்களால் இந்தியாவின் திறன் மேம்பட்டு வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

வாக்களிப்பது கடமை: மோடி

இதனிடையே, வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை மட்டுமல்ல என்றும் குடிமக்களின் முக்கியமான கடமை என்றும் தேசிய வாக்காளர்கள் நாளையொட்டி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகம் குறித்து தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும் பல நூற்றாண்டு கால பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் இயல்பாகவே ஜனநாயக உணர்வைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜனநாயகத்தில் வாக்காளர்களாக இருப்பது ஒரு பாக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் என்பவர் நாட்டின் விதியை உருவாக்குபவர் என்றும் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் அழியாத மை இந்திய ஜனநாயகம் துடிப்பானது என்பதை எடுத்துரைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இளையர்கள், இளம் பெண்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் மிக முக்கியமானது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்