சீதாப்பூர்: மத்திய கிழக்குப் போரால் உயிரிழந்த இந்திய ஆடவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்படி ஆடவரின் குடும்பத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது ரவி கோபால், சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றிவந்தார்.
பகைன் கிராமத்தைச் சேர்ந்த கோபால் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலைசெய்துவந்தார்.
இந்நிலையில், ஈரான் நடத்திய அண்மைய ஏவுகணைத் தாக்குதலில் கோபால் உயிரிழந்தார்.
அதையடுத்து கோபாலின் நல்லுடலை இந்திய வெளியுறவு அமைச்சும் மாவட்ட நிர்வாகமும் அவரது சொந்த ஊரான பகைனில் வசிக்கும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தன.
கோபாலின் இறுதிச் சடங்கில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கோபாலின் இறுதிச் சடங்கை அவரது அண்ணன் மன்மோகன் தயால் நிறைவேற்றினார்.
கோபாலுக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் குடும்பம் ஏழ்மையில் இருப்பதாகக் கூறிய கோபாலின் குடும்பத்தினர் அவரது மரணத்துக்கு உரிய இழப்பீட்டை வழங்கும்படி அரசாங்கத்திடம் கோரினர்.
அத்துடன் கோபாலின் மனைவிக்கு அரசாங்க வேலையையும் வழங்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கோபால் குடும்பத்தினரின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்துவருவதாகத் தெரிவித்தது.

