அண்மையில்தான் இந்தியாவில் இணையம் வழி நடைபெறும் சூதாட்டம், பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர், அடுத்து என்ன செய்யலாம் எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
இணைய விளையாட்டுகள் மூலம் மாதந்தோறும் இந்திய இளையர்கள் ரூ.10,000 கோடி ரூபாய் செலவிடுவதாகத் தெரிகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface - UPI) மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இந்தியாவில், மும்பை மாநகரம்தான் இணைய விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு, டெல்லி ஆகியவை உள்ளன. 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இணைய விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இணைய விளையாட்டுகளில் பல ரகங்கள் இருந்தாலும், ‘ஃபேன்டசி கேம்ஸ்’ எனப்படும் கற்பனையுடன் கூடிய விளையாட்டுகளில்தான் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர்.
“ஆனால், இணைய விளையாட்டுகள் கற்பனை அடிப்படையில் உருவானவையே தவிர, அந்தச் சூதாட்டச் செயலியால் ஏராளமானோர் உயிரை மாய்த்துக்கொண்டது உண்மை.
“எனவே, நாட்டின் பொருளியலைக் காப்பாற்றுவதுடன், இளையர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது,” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆண்டுதோறும், ஓர் இந்திய இளையர் ரூ.1,700 வரை செலவிடுகிறார். நாடு முழுவதும் குறைந்தபட்சம் 56 கோடி பேர் இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 33 கோடி என்றால், பெண்கள் 23 கோடி என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
வாரந்தோறும், இந்தியப் பெண்கள் சராசரியாக 11.20 மணி நேரம் வரை இணைய விளையாட்டுக்கு என நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆண்கள் ஏறக்குறைய 10 மணி நேரத்தைச் செலவிடுவதும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு மாநிலங்கள் சூதாட்டச் செயலிகளைத் தடை செய்துள்ளன என்றாலும், ‘ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ்’ விளையாட்டுகளைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கின்றன.
அரசாங்கத்தின் தடையை மீறி இளையர்கள் பலர் இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
இந்தியாவின் இணைய விளையாட்டுத் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20% வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 நிதியாண்டில் இந்தத் துறையின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்த வருவாய், எதிர்வரும் 2029 நிதியாண்டுக்குள் 9.2 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக குங்குமம் ஊடகக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சூதாட்டச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், நாள்தோறும் புதுப்புது ரகங்களில் புதிய விளையாட்டுகள் அறிமுகமாகின்றன. இது விளையாட்டாளர்களை உற்சாகப்படுத்துகிறது. மேலும், பணம் செலுத்தினால் அந்த விளையாட்டை ஆடுபவர்களுக்கு ‘பிரீமியம்’ பலன்கள், சலுகைகள் கிடைக்கும் என்ற அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
“இதுபோன்ற உத்திகள்தான் தொடர்ந்து விளையாடுபவர்களை அடிமையாக்கி, பணத்தைச் செலவிடத் தூண்டுகிறது,” என்று கட்டுரையாளர் ஷாலினி நியூட்டன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இணைய விளையாட்டுகளுக்கு எதிராக எதிர்ப்புக்குரல் பலமாக இருந்தாலும், ஒருதரப்பினர் மறைமுகமாக ‘ஆன்லைன்’ விளையாட்டுகளை ஆதரிக்கவும் செய்கின்றனர்.
இந்தியா இந்தத் துறையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் அனைத்து விளையாட்டுகளையும் சட்டபூர்வமாக மாற்றி, வரிகளை உயர்த்தினால் அரசாங்கம் கணிசமான வருவாய் ஈட்ட வழி கிடைக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஒவ்வொரு மாநிலமும் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தங்கள் இளையர்கள் இத்தகைய இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்று ஒரு தரப்பினர் ஆலோசனையும் வழங்குகின்றனர்.
ஆனால், 16 முதல் 24 வயதுக்குட்பட்டோரில் 91% பேர் இணைய விளையாட்டுகளின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.
பல வகையான புதிய தொழில்நுட்ப நுணுக்கங்கள் மூலம் உலக அளவில் உள்ள இளையர்களை எப்படியாவது சென்றடைந்து விடுகின்றன இணைய விளையாட்டுகள்.
எனவே, அவர்கள் இழக்கக்கூடிய பணத்தின் அளவு சற்று குறையலாமே தவிர, இணைய விளையாட்டில் இருந்து மக்களை ஒரேயடியாகப் பிரித்துவிட முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
இத்தகைய விளையாட்டுகளை வடிவமைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தை மதுப்பழக்கம் எவ்வாறு சீரழித்து வருகிறதோ, அதைவிட பல மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை இணைய விளையாட்டுகள் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புக்கொடியை உயர்த்துகின்றனர்.