ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பெரும் வெற்றியை சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில், நவம்பர் 13ஆம் தேதி 43 தொகுதிகளுக்கும் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு ஒருவாரம் கழித்து நவம்பர் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
இந்த வாக்குகளைச் சனிக்கிழமை (நவம்பர் 23) காலை முதல் அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்தது. என்றாலும், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, “நிலைமை மாறும், நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்று நம்பிக்கை தெரிவித்து நிதானம் காத்து வந்தது.
இதையடுத்து இரண்டரை மணிநேரத்தில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. காலை 10.30 மணிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.
அதன் பிறகு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 51 தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை பெற்றது. என்டிஏ கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது.
மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற 41 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இண்டியா கூட்டணி அந்த இலக்கை தாண்டியது.
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்கள் களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
தொடர்புடைய செய்திகள்
ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் முன்னிலை வகித்தாலும் முதல்வர் ஹேமந்த் சோரனின் குடும்பம் இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டின.
இந்தத் தேர்தலில் ஹேமந்த் சோரனின் குடும்பத்தில் இருந்து அவர் உட்பட, அவரது மனைவி கல்பனா சோரன், அவரது இளைய சகோதரர் பசாந்த் சோரன், அவரது அண்ணி சீதா சோரன் என நான்கு பேர் போட்டியிட்டனர்.
இதில் முந்தைய மூவரும் ஜேஎம்எம் சார்பில் போட்டியிட, ஹேமந்தின் அண்ணன் மனைவி சீதா சோரன் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
இவர்களில் முதல்வர் ஹேமந்த் சோரனைத் தவிர மற்ற மூவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட சனிக்கிழமை பின்தங்கியே இருந்தனர்.

