கோலாலம்பூர்: இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு வசதியை 2027 ஜனவரி 1ஆம் தேதிமுதல் மலேசியா திரும்பப் பெறவுள்ளது.
இதனால், அந்நாட்டிற்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் வருகைக்கு முன்பே விசா பெற வேண்டும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வசதி இருக்காது என்று மலேசியக் குடிநுழைவுத் துறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
புதிய நுழைவு விதிமுறைகள் நடப்பிற்கு வருவதற்கு முன்னதாக, 2026 டிசம்பர் 1ஆம் தேதி முதல் ‘மைவிசா’ இணையவாயில் மூலமாக இந்தியர்கள் மலேசிய விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம்.
நிலுவையிலுள்ள விசா விண்ணப்பங்களுக்கான புதிய விதியையும் மலேசியக் குடிநுழைவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘புதிய விண்ணப்பம்’ அல்லது ‘கட்டணம் செலுத்தப்பட வேண்டும்’ எனும் நிலையில் ஏழு வேலை நாள்களுக்குமேல் இருக்கும் விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும்.
2026 அக்டோபர் 1ஆம் தேதி நடப்பிற்கு வந்த இந்த விதி, 2026 செப்டம்பர் 1ஆம் தேதிக்குமுன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உட்பட அனைத்திற்கும் பொருந்தும். காலாவதியான விண்ணப்பங்களுக்கு உரியோர் புதுப்பிக்கப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பம் செய்யவேண்டும்.
விசா கட்டணம் திருப்பித் தரப்படாது
விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விசா செயலாக்கக் கட்டணம் திருப்பித் தரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை மாற்றங்கள் அல்லது பயணத் திட்ட மாற்றங்களுக்கும் கட்டணம் திருப்பித் தரப்படாது. மலேசிய அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப நுழைவு விதிமுறைகளை எந்த நேரத்திலும் திருத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாகவும் குடிநுழைவுத்துறை கூறியுள்ளது.
முன்னதாக, 2026 செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் தகுதியுள்ள 31 நாட்டினர்க்கு மட்டுமே பன்முறை நுழைவு அனுமதி விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வணிகம், மருத்துவச் சிகிச்சை, திருமணச் சுற்றுலா, விமானம் - சொகுசுக் கப்பல் பயணம் ஆகிய நோக்கங்களுக்காக வருவோர்க்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் முழுப் பயணக் காலத்தையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்புறுதியைப் பெறுமாறு மலேசியா வலியுறுத்தியுள்ளது. மலேசியாவில் பெறப்படும் மருத்துவச் சிகிச்சைச் செலவுகளை வெளிநாட்டினரே ஏற்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை முன்னதாக அறிவித்திருந்தது.
விசா விண்ணப்பத்திற்குத் துணை ஆவணமாக ‘மைடிரிப்பாஸ்’ (MyTripPass) தளத்தையும் அது பரிந்துரைத்துள்ளது. மருத்துவக் காப்புறுதியையும் அவசரகால உதவியையும் அந்தப் பயணத்தளம் வழங்குகிறது.
