குஷிநகர்: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைப் பதற்றம் தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயர் வைக்கப்பட்டது.
கடந்த 7ஆம் தேதியன்று இந்நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மே 10, 11ஆம் தேதிகளில், உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 குழந்தைகள் பிறந்தன.
அனைத்து குழந்தைகளுக்கும் ‘சிந்தூர்’ எனப் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளதாக அம்மருத்துவமனை முதல்வர் ஆர்.கே. ஷாஹி தெரிவித்துள்ளார்.
இந்திய ஆயுதப்படைகளைப் பாராட்டி, தன் மகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டியதாக குஷிநகரைச் சேர்ந்த அர்ச்சனா கூறினார்.
“இது வெறும் வார்த்தை அல்ல. உத்வேகம் ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சி,” என்றார் அவர்.

