தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்களுக்கு முதலிடம்

தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்களுக்கு முதலிடம்

2 mins read
70c7d4e5-105a-4a93-a9b5-38feb335f8b8
கடந்த 2024 ஆம் ஆண்டில் 137 பில்லியன் டாலர் தொகையைப் பெற்றுள்ளது இந்தியா. - படம்: ஹன்ஸ் இந்தியா

நியூயார்க்: தாய்நாட்டுக்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்கள் கொண்டுள்ள ஈடுபாடு காரணாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தைப் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பாக ஐநா மன்றம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் தாய்நாட்டின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கும், பொருளியல் நிலைத்தன்மைக்கும் முதுகெலும்பாக இருப்பதாகப் பாராட்டியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 137 பில்லியன் டாலர் தொகையைப் பெற்றுள்ளது இந்தியா. இதுவரை எந்த நாடும் நூறு பில்லியன் டாலர் என்ற அளவைத் தாண்டியதில்லை.

ஐநாவின் புலம்பெயர்ந்தோர் முகமை வெளியிட்ட விரிவான அறிக்கை ஒன்றில், கடந்த 2024ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, இந்தியர்கள் 12.87 லட்சம் கோடி ரூபாயை தங்கள் தாய்நாட்டிற்காக அனுப்பியது தெரியவந்துள்ளது.

கடந்த 2010ல் ஏறக்குறைய 53.5 பில்லியன் டாலராக இருந்த இந்த வரவு, 2015ல் 68.9 பில்லியன் டாலராகவும், 2020ல் 83.1 பில்லியன் டாலராகவும் உயர்ந்து, 2024ல் 137 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

கடந்த 2024 தரவுகளின்படி தாய்நாட்டிற்குப் பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பிலிப்பீன்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

இதே வேளையில் உலகளவில் மற்ற நாடுகளுக்கு அதிக பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது.

இவ்வாறு புலம்பெயர் குடிமக்களிடம் இருந்து நிதி வரவுகளைப் பெறும் நாடுகள், அதைக் கொண்டு குடும்ப நுகர்வு, கல்வி, சுகாதாரம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

மேலும், உலக அளவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்