அமெரிக்க விசா நேர்காணல்: 346 நாள்கள் காத்திருக்கும் இந்தியர்கள்

அமெரிக்க விசா நேர்காணல்: 346 நாள்கள் காத்திருக்கும் இந்தியர்கள்

கோப்புப் படம்: எக்கானமிக் டைம்ஸ்

30 Sep 2026 - 8:17 pm

1 mins read

புதுடெல்லி: அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்கள், விசா நேர்காணலுக்குச் சராசரியாக 346 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அமெரிக்கக் கணக்குப் பொறுப்பு அலுவலகம் (GAO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பாக, ‘பி1/பி2’ வகை விசாவுக்கான நேர்காணலுக்கு ஏறக்குறைய 42 நாள்கள் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், 2025ஆம் நிதியாண்டில் காத்திருப்புக்காலம் எட்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அமெரிக்க விசாவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், தேவையான எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்படாததே இந்தக் கடுமையான காலதாமதத்துக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசு அறிக்கையின்படி, 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 1,455,255 குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பங்களைக் கையாள வெறும் 68 தூதரக அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனர்.

இதன்மூலம், அதிகாரி ஒருவர் சராசரியாக 21,401 விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டிய பணிச்சுமைக்குத் தள்ளப்பட்டார். சீனா (34 நாள்கள்), பிரேசில் (32 நாள்கள்) போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் காத்திருப்புக் காலம் மிக அதிகமாக உள்ளது.

அதேவேளையில், அனைத்து நகரங்களிலும் நிலைமை ஒன்றுபோல் இல்லை. புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் நகரங்களில் நேர்காணலுக்கு அதிக காலம் ஆகும் நிலையில், சென்னை போன்ற சில மையங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த காத்திருப்புக் காலமே நிலவுகிறது.

விசா கட்டண உயர்வு, நீண்ட காத்திருப்புக்காலம் காரணமாக அமெரிக்கா செல்லத் திட்டமிடும் இந்தியச் சுற்றுப்பயணிகள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்