350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இந்தியாவின் சாதனை: முர்மு பெருமிதம்

350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இந்தியாவின் சாதனை: முர்மு பெருமிதம்

2 mins read
49638d0c-e273-401c-a0f5-5b3b267a80f2
திரௌபதி முர்மு. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: கடந்த ஆண்டு 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து, உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளதாக அதிபர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 28) உரையாற்றிய அதிபர் முர்மு, உலகின் மூன்றாவது ஆகப்பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகம் முழுவதும் பொருளியல் மந்தநிலை காணப்படும், இந்திய பொருளியல் வலுவாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் சூரிய மின் திட்டத்திற்கான இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அதிபர் முர்மு குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஏஐ துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் பகுதி மின்கடத்தி சில் உற்பத்தியில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.

அசாமில் உற்பத்தி செய்யப்படும் பகுதி மின்கடத்தி சில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அதிபர் முர்மு தெரிவித்தார்.

“கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“விண்வெளி சுற்றுலாத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தும் நாள் வெகுதூரம் இல்லை. உலக அளவில் ஆகப்பெரிய மெட்ரோ வலை அமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.

“நாடு முழுவதும் இரண்டு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மேலும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்,” என்று தமது உரையில் அதிபர் முர்மு குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்