குவான்டம் துறையில் இந்தியா சாதனை

குவான்டம் துறையில் இந்தியா சாதனை

2 mins read
db9af8e8-de2a-4be8-9894-c393e2d36cfb
ஜிதேந்திர சிங். - படம்: தி ஸ்டேட்ஸ்மேன்
multi-img1 of 2

புதுடெல்லி: குவான்டம் எனும் அணுத்துகள் இயற்பியல் தொழில்நுட்பத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய குவான்டம் திட்டம் குறித்து புதன்கிழமை (ஏப்ரல் 8) ஆய்வு மேற்கொண்ட அவர், உலகின் மிக நீளமான குவான்டம் தகவல் தொடர்புக் கட்டமைப்புகளில் ஒன்றான ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கட்டமைப்பு வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கருத்துரைத்தார்.

இந்தியா நிர்ணயித்துள்ள குவான்டம் தொழில்நுட்ப இலக்குகளைச் சென்றடைவதில் அது முக்கிய மைல்கல் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் தேசிய குவான்டம் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதற்குள் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் விவரித்தனர்.

புதுத் தொழில் நிறுவனமொன்றின் பங்களிப்புடன் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகின் மிக நீளமான குவான்டம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங், இது எட்டு ஆண்டுகளில் 2,000 கிலோமீட்டர் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

குவான்டம் கம்ப்யூட்டிங், உயிரியல் தொழில்நுட்பம், மேம்பட்ட தகவல்தொடர்பு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த, அதன் அறிவியல் சாதனைகளைச் சிறந்த முறையில் உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் திரு ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார்.

குவான்டம் தொழில்நுட்பம் என்பதை இனி விருப்பத் தெரிவாகக் கருத இயலாது என்றும் அது ஓர் உத்திபூர்வத் தேவை என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா தனது தகவல்தொடர்பு அமைப்புகள், பாதுகாப்புக் கட்டமைப்பு, சுகாதாரப் புத்தாக்கம், உலகளாவிய தொழில்நுட்ப நிலை ஆகியவற்றை உறுதிப்படுத்த விரும்பினால், குவான்டம் துறையில் முன்னணியில் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்