‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பரிந்துரை ஏற்பு

1 mins read
31cbc513-a8f6-4ef8-b2f2-a85674757809
கூட்டமைப்பு அரசியலை மீறுவதாக உள்ளது எனக் கூறி, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை இந்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்த உதவும் நோக்கத்துடன், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசாங்கம் அமைத்த குழு ஒன்று கடந்த மார்ச் மாதம் பரிந்துரைத்திருந்தது.

ஆயினும், சர்ச்சைக்குரியதாகச் சொல்லப்படும் இந்தப் பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மக்களாட்சியை வலுப்படுத்தும் என்று இந்தியத் தகவல் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அத்துடன், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்குப் பெரும்பான்மை இந்திய இளையர்களின் ஆதரவிருப்பதாக அவர் கூறினார்.

இதன் தொடர்பில் அரசாங்கம் கருத்திணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எல்லாச் சட்டப் பிரிவுகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட அரசாங்கக் குழு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டது.

அதே நேரத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் கூட்டமைப்பு அரசியலை மீறுவதாக உள்ளது எனக் கூறி, முக்கிய எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்