புதுடெல்லி: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டகிராம் வெளியிட்டதாக புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வகையில், இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்புமாறு மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமது அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்த அழைப்பாணை குறித்து மெட்டா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும், இன்ஸ்டகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் இருப்பதை வெளிப்படுத்திய பிபிசி புலனாய்வுக்கு அது பதிலளித்தது.
இதுபோன்ற உள்ளடக்கங்களைக் கோருவதையோ பகிர்ந்துகொள்வதையோ மெட்டா நிறுவனம் சகித்துக்கொள்ளாது என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த தனது குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் மெட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தனியுரிமையை அதிகரிப்பதாகக் கூறும் ஒரு நடவடிக்கையாக, பயனர்கள் தங்களுக்கென ஒரு பெயரை முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், 600 மில்லியன் பயனர்களுடன் வாட்ஸ்அப்பின் ஆகப்பெரிய சந்தையாகத் திகழும் இந்தியாவில், அந்நிறுவனம் மத்திய அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய மின்னணு, தகவல்தொடர்பு அமைச்சு சனிக்கிழமை (ஜூலை 4) மெட்டா நிறுவனத்திற்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களையும் விளம்பரங்களையும் இன்ஸ்டகிராமிலிருந்து உடனடியாக நீக்குமாறும் அது தொடர்பாக ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் அந்த உத்தரவில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

