மும்பை: இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது இந்நகரம் என்று ‘தூய்மை கணக்கெடுப்பு 2025’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூய்மை நகரப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மூன்று நகரங்களும் கர்நாடகாவின் ஒரே ஒரு நகரமும் இடம் பெற்றுள்ளன.
தூய்மையான நகரங்களின் பட்டியலில் கடந்த 2017 முதல் இந்தூர் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்திலும், நவி மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
லண்டனைச் சேர்ந்த கார்டியன் பத்திரிகை இந்தூர் நகரம் குறித்து வெளியிட்ட செய்தியில், அங்கு தூய்மைப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
“வடஇந்தியாவில், பல நகரங்கள் குப்பைக் குவியல்களுடன் காணப்படுவது வழக்கம். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரும் முன்பு அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
“ஒவ்வொரு நாளும் இரவு 850 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். குப்பை வண்டிகள் ஒவ்வொரு தெருவிலும் ஐஸ்கிரீம் வண்டிகள் போல அறிவித்தபடி வருகின்றன. அந்த சத்தம் கேட்டதும் மக்கள் ஈரக் குப்பை, உலர் குப்பை என பிரித்து வண்டிகளில் போடுகின்றனர்,” என்று கார்டியன் செய்தி கூறுகிறது.
குப்பை வண்டிகள் சரியான சேவைகளை வழங்குகிறதா இல்லையா என்பதை அதிகாரிகள் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிக்கிறார்கள் என்றும் சிறிய தெருக்களில் கூட வண்ணமயமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகியவையும் கர்நாடகாவின் மைசூரும் (8ஆம் இடம்) பிடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் (7), புதுடெல்லி (9), சட்டீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் (10) ஆகியவற்றுக்கும் இடம் கிடைத்துள்ளன.
சில முக்கிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டன.

