இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சாதனை அளவு உயர்வு

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சாதனை அளவு உயர்வு

2 mins read
f7a4e16b-9054-4967-92aa-dd9364140cb0
2026 ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து மட்டும் இந்தியா நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: மத்திய கிழக்குப் பகுதியில் புவிசார் அரசியல் பதற்றங்கள் நீடித்த போதிலும், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு 4.93 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

எரிசக்தி ஆய்வு நிறுவனமான ‘கெப்ளர்’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச இறக்குமதி அளவு இதுவாகும்.

குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து மட்டும் நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்த் தேவையில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்டு, அந்நாட்டின் முதன்மை எண்ணெய் வழங்குநராக ரஷ்யா தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு மே மாதத்தில் 36.5 விழுக்காடாக இருந்த ரஷ்யாவின் பங்கு, ஜூன் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. உக்ரேன் போருக்குப் பின், தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றன.

உலகில் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, தன் தேவையில் 88 விழுக்காட்டிற்கும் மேல் இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. எனினும், இந்தியாவின் விநியோகக் கட்டமைப்பு சீராகவும் பலதரப்பட்ட நாடுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளதால், அனைத்துலகச் சந்தையில் விலை மாற்றங்கள் இருந்தாலும் பாதிப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் தொடக்கம் வரையிலான கச்சா எண்ணெய்த் தேவையைக் கணக்கிட்டு, அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளதால், தற்போதைக்கு ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் கெப்ளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்