புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் தொடர் முயற்சியால் பாதுகாப்புத் துறையின் தயார்நிலை வலுப்பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு சான்று என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த நடவடிக்கையில் ‘ஆகாஷ் தீர்’, ‘ஆகாஷ் ஏவுகணை’, பிரம்மோஸ் போன்ற அதிநவீன அமைப்புகளின் பல்வேறு அதிநவீன உபகரணங்களும் திறம்பட பயன்படுத்தப்பட்டன. கடந்த 12 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அடித்தளமே இதற்குக் காரணம்,” என்றார் அவர்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், சுயசார்பு இலக்கை அடைவதற்கான மற்றொரு திருப்புமுனை சீர்திருத்தமாக உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த வழித்தடங்களுக்குள் மேம்பட்ட பாதுகாப்புத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களுக்காக ரூ.70,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ ரூ.10,000 கோடி ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இளையர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் வெற்றிக்கு ஒரு வலுவான உதாரணமாக உருவெடுத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
பாதுகாப்புப் படைகளால் இதுவரை 509 பொருள்கள் அடங்கிய ஐந்து நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களும் பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களால் 5,012 பொருள்கள் அடங்கிய ஐந்து பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

