புதுடெல்லி: அடுத்த ஈராண்டுகளில் இந்தியாவின் தற்காப்பு சார்ந்த ஏற்றுமதியின் மதிப்பு 50,000 கோடி ரூபாயை எட்டும் என அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக கொரியா சென்றுள்ள அவர், இந்தியா தற்போது வலிமையான, தன்னம்பிக்கையான, திறமையான நாடாக உருமாறி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கொரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.
தற்காப்பு உற்பத்தித் துறையில் தன்னிறைவு அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார்.
அடுத்த சில மாதங்களில் தற்காப்பு சார்ந்த உற்பத்தி 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா இப்போது உலகிற்குத் தீர்வுகளை வழங்கும் உலக வல்லரசாக உருவெடுத்து வருகிறது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இதனிடையே, சோலில் நடைபெற்ற இந்திய-கொரியத் தற்காப்புத் தொழில் வர்த்தக வட்டமேசை மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் திரு ராஜ்நாத். அப்போது இருதரப்புக்கும் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
“எதிர்காலத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் தற்காப்பு அமைப்புகளையும் இரு நாடுகளும் இணைந்து உருவாக்கி, உற்பத்தி செய்ய முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“இருதரப்புத் தொழில் ஒத்துழைப்பின் வெற்றியானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, நம்பகமான பங்காளித்துவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது,” என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

