புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, ஆண்டுக்காண்டு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 8.5 விழுக்காடு அதிகரித்து உள்ளது.
இந்தியாவுக்குள் இயங்கும் பல்வேறு விமானங்கள் அந்த மாதத்தில் 143.16 லட்சம் பயணிகளைக் கையாண்டன. 2024 ஏப்ரல் மாதம் அந்த எண்ணிக்கை 132 லட்சமாக இருந்தது.
வட்டார இடையூறுகள், மோசமான வானிலை ஆகியவற்றுக்கு இடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
மொத்தப் பயணிகளில் ஏறத்தாழ 64.1 விழுக்காட்டினருக்கு இண்டிகோ விமானங்கள் சேவையாற்றின. அந்த ஒரு மாதத்தில் மட்டும் 92.1 லட்சம் பயணிகள் இண்டிகோ விமானங்களில் பயணம் செய்தனர்.
அதற்கு அடுத்த நிலையில் ஏர் இந்தியா குழுமத்தின் விமானங்கள் 27.2 விழுக்காட்டுப் பயணிகளைக் கையாண்டன.
மூன்றாவதாக, ஆகாஸா ஏர் நிறுவனத்தின் விமானங்கள் 5 விழுக்காடும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 2.6 விழுக்காடும் சேவை புரிந்ததாக இயக்குநரக அறிக்கைக் குறிப்பிடுகிறது.
மேலும், தாமதமின்றி குறித்த நேரத்தில் சேவையாற்றிய விமானங்களின் பட்டியலிலும் இண்டிகோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா முழுவதும் இயங்கும் இண்டிகோ விமானங்கள் 80.8 விழுக்காடு சரியான நேரத்தில் சேவையாற்றின.
தொடர்புடைய செய்திகள்
விமானப் போக்குவரத்து ஏற்றம் கண்டபோதிலும் ஏப்ரல் மாதத்தில் சவால்களும் இருந்தன.
மோசமான வானிலை காரணமாக 38.8 விழுக்காட்டுப் பயணங்கள் அந்த மாதத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன் மூலம் ஏறத்தாழ 20,844 பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.
விமானப் பயணச் சேவை ரத்து செய்ததற்கான விமான நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் 41.69 கோடி ரூபாயை பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கின. மார்ச் மாதத்தைக் காட்டிலும் அது 117 விழுக்காடு அதிகம்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் விமானங்களின் தாமதம் காரணமாக 96,350 பயணிகள் சிரமத்திற்கு ஆளாயினர். மார்ச் மாதத்தைக் காட்டிலும் அந்த விகிதம் 68 விழுக்காடு அதிகம்.