இந்திய எரிசக்தித் துறையின் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு வாய்ப்புகள்

2 mins read
5efef8cd-cafe-4de0-a222-b5bff522953d
இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். - படம்: இக்கனாமிக் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் எரிசக்தித் துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று இந்திய எரிசக்தி வாரம் 2026ல் உரையாற்றியபோது கூறினார்.

“தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எரிசக்தித் துறைக்கு இந்தியா வாய்ப்புகளின் பூமியாக உள்ளது. இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாறும்,” என்று திரு மோடி கூறினார்.

எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 260 மில்லியன் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக விரிவுபடுத்தப்படும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்க்க நாடு இலக்கு கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியா பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்களை வெளிப்படையாக மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறது. ஏனெனில், இது உற்பத்தித் துறையை மேம்படுத்துவதுடன் சேவைகளை ஆதரிக்கும் என்று திரு மோடி கூறினார்.

“இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது என்று மோடி மேலும் கூறினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று வர்ணித்து மக்கள் விவாதித்து வருகின்றனர்.

“இது இரண்டு பொருளியல்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையும், உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்திய எரிசக்தி வாரம் 2026, எரிசக்திப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தாக்க நிபுணர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான உலகளாவிய தளமாகச் செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்