அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலையைக் கட்டவுள்ள இந்தியாவின் எஸ்சார் குழுமம்

அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலையைக் கட்டவுள்ள இந்தியாவின் எஸ்சார் குழுமம்

படம்: ராய்ட்டர்ஸ்

29 Sep 2026 - 5:17 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் எஸ்சார் குழுமம் அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலையைக் கட்ட கிட்டத்தட்ட 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முதலீடு குறித்து தகவலும் வெளியிட்டுள்ளார்.

ரூயா குடும்பத்திற்குச் சொந்தமான எஸ்சார் நிறுவனம் தனது அமெரிக்கத் துணை நிறுவனமான மெசாபி மெட்டாலிக்ஸ் மூலம் இந்த முதலீட்டைச் செய்கிறது.

முதலீடு அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு டிரம்ப், “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையை மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் அயோவா மாநிலத்தில் கட்டவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று,” என்று அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் தகவல்படி, அயோவாவில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆலை கட்டப்படவுள்ளது. அது அந்த மாநிலத்திற்கு 1,750 நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கொண்டுவரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டம் மின்னசோட்டாவில் உள்ள ஒரு புதிய சுரங்கத்தின் இரும்புத் தாதுவைப் பயன்படுத்தும். அதன் மூலம் சுரங்கத்திலிருந்து எஃகு உற்பத்தி வரையிலான ஓர் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி உருவாக்கப்படும்.

மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரேவந்த் ரூயா கூறுகையில், தனது குடும்பம் மின்னசோட்டா இரும்புத் தாது சுரங்கத்தில் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலரை முதலீடு செய்யும்,” என்று குறிப்பிட்டார்.

2030ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ஆலை, ஆண்டுக்கு 10 மில்லியன் டன் எஃகை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது

மேலும் அடுத்த பத்தாண்டுகளில் அது அமெரிக்கப் பொருளியலுக்கு 95 பில்லியன் டாலரைச் சேர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்முதலீடுவரிச்சலுகை