தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் கடும் வறுமை விகிதம் 5.3%க்கு சரிவு: உலக வங்கி

2 mins read
e25f9af5-4a9d-48b0-bf81-8d567e3a1258
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோ. - படம்: housing.com / இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளோர் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் சரிந்திருப்பது உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2011-12 காலகட்டத்தில் 27.1 விழுக்காட்டினர் கடும் வறுமைக்கு ஆளாயினர். 2022-23 காலத்தில் அந்த விகிதம் 5.3 விழுக்காட்டுக்கு சரிந்தது உலக வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருப்பதாக என்டிடிவி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

2022-23 ஆண்டு காலத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 75.24 மில்லியன் மக்கள் கடும் வறுமைக்கு ஆளாயினர். இந்த எண்ணிக்கை, 2011-12 ஆண்டு காலத்தில் பதிவான 344.47 மில்லியனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

அப்படியென்றால் உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர் என்றாகும். 2011-12ல் கடும் வறுமைக்கு ஆளானோரில் 65 விழுக்காட்டினர் உத்தரப் பிரதேசம், மகாரா‌ஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2022-23ல் கடும் வறுமை விகிதம் சரிந்ததற்கு அந்த மாநிலங்களில் நிலைமை பெரிய அளவில் மேம்பட்டது முக்கியக் காரணமாகும்.

இந்தியாவின் நகர்ப்புற, கிராமப்புற வட்டாரங்கள் என இருவகைப் பகுதிகளிலும் கடும் வறுமை விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது.

அனைத்துலகக் கணக்கெடுப்புத் தரநிலைகளின்படி நாளுக்கு மூன்று டாலருக்குக் (3.87 வெள்ளி) குறைவாகப் பெறுபவர்கள் கடும் வறுமைக்கு ஆளானவர்களாக உலக வங்கி வகைப்படுத்துகிறது. இந்தத் தரநிலை, 2021ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக 2017ஆம் ஆண்டு அந்தத் தரநிலை நாளுக்கு 2.15 டாலருக்குக் குறைவாகப் பெறுவோரை உள்ளடக்கியது. அந்தக் காலகட்ட விலைவாசியின்படி தரநிலை நிர்ணயிக்கப்பட்டது.

அந்தத் தரநிலையின்படி 2022ஆம் ஆண்டு 33.66 மில்லியன் மக்கள் கடும் வறுமைக்கு ஆளாயினர். இந்த எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டுப் பதிவான 205.93 மில்லியனைவிட மிகவும் குறைவு.

குறிப்புச் சொற்கள்