கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமம் போலிச் சான்றிதழால் தலைகுனிந்து நிற்கிறது.
கடற்கரையோர பதான்காளி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் பிறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கித் தவிக்கிறது.
ஏறத்தாழ 4,000 குடும்பங்களை உள்ளடக்கி அந்தக் கிராமப் பஞ்சாயத்தில் கடந்த ஈராண்டுகளில் 3,500க்கும் அதிகமான போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
போலி கடப்பிதழ் (பாஸ்போர்ட்) விவகாரத்தைத் தோண்டியபோது போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவது அம்பலமானது.
கிராமப் பஞ்சாயத்து போலியாக வழங்கும் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி கடப்பிதழ் வாங்குவோர் அதிகரித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதுபோன்ற 400 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல்துறையினர், பெரும்பாலானவை பங்ளாதேஷி குடிமக்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
போலி கடப்பிதழ் விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கிய அதிகாரிகள், கௌதம் சர்தார் என்னும் கிராமப் பஞ்சாயத்து ஊழியரைக் கடந்த ஜூன் 7ஆம் தேதி கைது செய்தனர்.
அதன் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் அவரும் ஒருவர். மேலும், போலி பிறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் அவர் மூளையாகச் செயல்பட்டவர் என்று காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்தால் அவமானத்தைச் சந்திப்பதாக பதான்காளி கிராம மக்கள் கூறுகின்றனர்.
அந்த ஊரைச் சேர்ந்த திபாலி முண்டா என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறும்போது, “இது எங்கள் கிராமத்தில்தான் நடக்க வேண்டுமா ? இதை நாங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. ‘போலி பிறப்புச் சான்றிதழின் தலைநகரம்’ என்ற அவப்பெயர் எங்கள் கிராமத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
“எங்களது உறவினர்கள் எங்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கின்றனர். கௌதம் சர்தார் என்னும் ஒரே ஓர் ஆள் எங்கள் கிராமத்தின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் அழித்துவிட்டான்,” என்றார் வேதனையுடன்.