தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் கிராம அங்கன்வாடி மையம்

2 mins read
d00df94b-6822-4873-8309-8d1e1c2b92b1
நாக்பூரில் இருந்து ஏறக்குறைய 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாடாம்னா கிராம அங்கன்வாடி மையம். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அங்கன்வாடி மையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாடாம்னா கிராம அங்கன்வாடி மையம்.

நாக்பூர் அருகே உள்ள இந்தக் கிராமத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறார்களுக்கு அனைத்து பயிற்சிகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படுகிறது என்பதுதான் அதன் சிறப்பு. இங்கு திறன்பேசிகள், மெய்நிகர் கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

நாக்பூரில் இருந்து ஏறக்குறைய 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாடாம்னா கிராமம். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 2 முதல் 6 வயது வரையிலான சிறார்கள் படிக்கின்றனர். இத்திட்டத்துக்கு ‘மிஷன் பால் பாராரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு பள்ளிகளைப் போல் கரும்பலகைகள் பயன்படுத்தப்படுவதில்லை. மின்னிலக்கப் பலகைதான் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டுமே வாடாம்னா கிராம அங்கன்வாடியில் படிக்கும் சிறார்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

நவீன கருவிகளைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு பாடங்கள் முன்பைவிட சுவாரசியமாக மாறியுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 2,200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த மையத்தில் இணைய வசதி, கண்காணிப்புக் கருவிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் (Virtual) சுற்றுப்பயணங்கள், வடிவங்கள், விலங்குகள், பொருள்களை அடையாளம் காண மின்னிலக்கப் பலகைகள், வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஒவ்வொரு மாணவரின் கற்றல் வேகத்துக்கும் ஏற்ப பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, விரைவாக அல்லது நிதானமாக கற்கும் மாணவர்கள் அனைவரும் சமமாகப் பயனடைகின்றனர்.

மேலும், ஓவியம் தீட்டுதல், பாட்டு பாடுதல், கவிதை சொல்லுதல் ஆகியவை தொடர்பான பயிற்சிகளும் தொழில்நுட்ப உதவியுடன்தான் நடத்தப்படுகின்றன.

குழந்தைகளின் படிப்படியான முன்னேற்றத்தைக் கவனிக்க அவர்களின் அனைத்துப் படைப்புகளும் மின்னலக்க முறையில் சேமித்து வைக்கப்படுவது மற்றொரு சிறப்பு என்கிறார்கள் கல்விசார் நிபுணர்கள்.

வாடாம்னா கிராமத்தை அடுத்து, இந்த மின்னிலக்க, ‘ஏஐ’ அங்கன்வாடி மையத் திட்டம் மேலும் 40 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்