திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் தானியங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது விழிஞ்சம் துறைமுகம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது இத்துறைமுகத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
கடல் சார்ந்த வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உலக அளவில் பல்வேறு நாடுகள் பயன்படுத்தும் பெரிய கப்பல்களை நிறுத்துவதற்கான துறைமுகம் இதுவரை இல்லை.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழா கண்டுள்ளது.
அரசு, தனியார் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தத் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் அதானி நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது.
முழுவீச்சில் இயங்குவதற்கான அனைத்துவித சோதனைகளையும் மேற்கொண்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதம் துறைமுகத்திற்கு வர்த்தகச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் கடல்சார் பாதைகளில் இயக்கப்படும் மிகப்பெரிய கப்பல்களைக் கையாளும் திறன் இந்தியாவில் இல்லை என்பதால் அக்கப்பல்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்குத்தான் முதலில் செல்லும். பின்னர் அங்கிருந்து பொருள்கள் அனைத்தும் சிறிய கொள்கலன் கப்பல்களுக்கு மாற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில் ஆழ்கடல் நீர் பரிமாற்றம் என்ற (டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட்) துறைமுகமான விழிஞ்சம் தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், அதன் மூலம் எத்தகைய பெரிய கப்பல்களையும் கையாள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, இந்தியாவின் கடல் வர்த்தகம் அதிகரிக்கும் என்பதுடன் உலக அளவிலான கடல் வணிகத்திலும் பல முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்தத் துறைமுகம் அனைத்துலக கடல் பாதையில் இருந்து பத்து கடல் மைல் தொலைவில் அமைந்திருப்பது விழிஞ்சம் துறைமுகத்தின் கூடுதல் சிறப்பு.
இதுநாள் வரை கொழும்பு, துபாய், சிங்கப்பூரில் நிறுத்தப்பட்ட பல பெரிய கப்பல்களை இனி, விழிஞ்சம் துறைமுகமும் கையாளும் வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்தால் இந்தியாவின் கப்பல் வழியிலான வர்த்தகம், சரக்கு போக்குவரத்து உலகளவில் வலுவடையும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
விழிஞ்சம் துறைமுகத் திட்டத்துக்கான மொத்த செலவில் மூன்றில் இரண்டு பங்கை கேரள அரசு அளித்துள்ளது என்றார் அவர்.
விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் அமைப்பு இந்தியாவிலேயே 20 மீட்டர் ஆழமுள்ளது. மூன்று கிலோ மீட்டர் தூரம்வரை இது நீண்டுள்ளது.
இங்கு 28 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள 9 மாடிக் கட்டடம் மிகப் பெரிய பொறியியல் சாதனை.
இத்துறைமுகத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற சோதனையின்போது 272க்கு மேற்பட்ட சரக்கு கப்பல்களும் அவற்றில் வந்த 5.5 லட்சம் கொள்கலன்களும் எந்தவிதமான சிக்கல்களும் இன்றி கையாளப்பட்டன.