இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027ல் தொடங்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027ல் தொடங்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 of 2
படங்கள்: தினத்தந்தி
கோப்புப் படம்: என்டிடிவி

21 Nov 2026 - 5:46 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை 2027ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக குஜராத் மாநிலம் சூரத் முதல் வாபி வரையிலான வழித்தடத்தில் அந்த புல்லட் ரயில் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

மும்பை வரையிலான முழுமையான பாதை கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்களைத் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை ஐசிஎஃப்,பிஇஎம்எல் நிறுவனங்கள் இணைந்து மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய பி-28 வகை ரயிலைத் தயாரித்து வருகின்றன.

இதன் முதல் பெட்டிக்கான அடிப்படைக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு, சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

“கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் தாமதமானதற்கு நிலம் கையகப்படுத்துவதிலும் அரசு அனுமதிகள் கிடைப்பதிலும் ஏற்பட்ட தாமதம் முக்கியக் காரணம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் குறித்துப் பேசிய அவர், செப்டம்பர் மாத நிலவரப்படி 456 கிலோமீட்டர் தூரத்திற்குத் தூண்கள் அமைக்கும் பணிகளும், 371 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல்மட்டப் பாலம் (வயாடக்ட்) அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 299 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு லட்சம் ஒலித் தடுப்பான்களும், 206 கிலோமீட்டர் மேல்மட்டப் பாலப் பகுதியில் 9,300 மேல்நிலை மின்கம்பங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.

இந்த ரயில் பாதைக்காக நான்கு மலைச் சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் 21 கிலோமீட்டர் நீளமுள்ள மகாராஷ்டிரச் சுரங்கப்பாதையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கும் முறையில் பணிகள் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எட்டு ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவற்றில் கட்டடக்கலை வடிவமைப்புகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்