புதுடெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், ரயில் தண்டவாளப் பாதைகள் அமைப்பது, மின்விநியோகம் ஆகிய பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன என்றார்.
மும்பை (மகாராஷ்டிரா), அகமதாபாத் (குஜராத்) ஆகிய நகரங்களுக்கு இடையே அதிவேக புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இவ்விரு நகரங்களுக்கு இடையே 508 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், 2027 ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அண்மையில் ஜப்பான் அமைச்சர் நகானோ குஜராத்திற்கு வந்திருந்தபோது, புல்லட் ரயில் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்ட அவர், 2027 முதல் புல்லட் ரயில் சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு என்றார்.