புதுடெல்லி: இந்தியாவில் தயாராகும் டெங்கி தடுப்பூசி தொடர்பான பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மிக விரைவில் டெங்கி தடுப்பூசி அறிமுகமாகும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாத்தியமானால் உலகின் முதல் டெங்கி தடுப்பூசியை அறிமுகப்படுத்திய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
உலகெங்கும் டெங்கி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் சரிபாதியினர் டெங்கி பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்துள்ளது என்றும் ஆண்டுதோறும் 100,400 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 முதல் இதுவரை இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் டெங்கி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறைந்தபட்சம், ஆண்டுதோறும் 1,500 பேர் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பனாசியா பயோடெக் (Panacea Biotec) நிறுவனம் டெங்கி தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியது.
‘டெங்கிஆல்’ (DengiAll) என்ற அதன் தடுப்பூசிக்கான பரிசோதனை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி சையத் காலிட் அலி தெரிவித்தார் என்று ஏஎஃப்பி செய்தி முகவை கூறியது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேற்பார்வையில் நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த ஆய்வில் இணைந்துள்ளனர்.
நீண்ட காலச் சோதனை முடிவுகள் கச்சிதமாக அமையும் பட்சத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘டெங்கி ஆல்’ தடுப்பூசி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, டெங்கி பாதிப்பைக் கட்டுப்படுத்த அல்லது குறைந்தபட்சம் அதன் தீவிரத்தைத் தடுக்க இந்தத் தடுப்பூசி அவசியம் என்கிறார் புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் ஏக்தா குப்தா.
கடந்த 2024ஆம் ஆண்டு ‘டெங்கி ஆல்’ தடுப்பூசிக்கான மூன்றாவது (இறுதிக்கட்ட) சோதனை தொடங்கியது. இதில் பங்கேற்றவர்களுக்கு தரமான தடுப்பூசியும் போலித் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டின் பிற்பாதியில் சோதனை முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் ‘டெங்கி ஆல்’ போன்ற மற்றொரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒருவேளை ‘டெங்கி ஆல்’ தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால், உலகின் முதல் ‘ஒற்றை-டோஸ்’ டெங்கி தடுப்பூசி என்று இது கருதப்படும்.


