புதுடெல்லி: இந்தியாவில் டெங்கித் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கி நோய்த்தடுப்பு, கட்டுப்பாடு தொடர்பான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதின் முக்கிய நடவடிக்கையாக, ஜெர்மனியின் டகேடா மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் கியூடெங்கா (QDENGA) தடுப்பூசிகளை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்குக் கடந்த ஜூலை மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
அந்தத் தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்குப் போடலாம். அதன் செயல்திறன் குறித்து பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் மூன்று கட்டங்களாக அந்தத் தடுப்பூசி சோதிக்கப்பட்டது. டெங்கித் தொற்றின் நான்கு வகைகள் தொடர்பிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
டெங்கித் தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட கியூடெங்கா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் அதனைச் சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமையை ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் டெங்கித் தடுப்பூசி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் விலை விவரம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
