கோல்கத்தா: இந்தியாவில் முதன்முதலாக மொழி அருங்காட்சியகம் ஒன்று கோல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மொழி, கலாசாரப் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ‘சப்தலோக்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறந்துவைக்கப்பட்டது.
இந்தியக் கலாசார அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய நூலகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தனித்துவமான அருங்காட்சியகம், நாட்டின் தொன்மையான மொழிகள், அவற்றின் பரிணாம வளர்ச்சி, வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ மரபுகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெறும் காட்சிப்பொருளாக மட்டுமன்றி, நவீன தொழில்நுட்ப உதவியுடன் பார்வையாளர்கள் மொழிகளின் வரலாற்றை நேரடியாக உணர்ந்துகொள்ளும் வகையிலும் ‘அதிநவீன மின்னிலக்கத் தொழில்நுட்பங்க’ளுடன் இது அமைக்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு நாட்டின் உண்மையான பாரம்பரியத்தை அதன் மொழிதான் சுமந்து நிற்கிறது என்றார்.
மொழிகளின் வாயிலாகவே ஒரு நாட்டின் கலாசாரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் மாணவர்கள் தாய்மொழியைக் கற்பதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்ள கூடுதலாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திரு அமித்ஷா வலியுறுத்தினார்.
கோல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகம் 22 இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

