புதுடெல்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் டெல்லி - ஜிந்த் இடையே வெற்றிகரமாக நடைபெற்றது.
ஹரியானாவின் சோனிபட் - ஜிந்த் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அன்று (ஜூன் 26) ரயிலின் செயல்திறன் குறித்து முழு மதிப்பீடு செய்யப்பட்டது.
ரயில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு, செயல்திறனை உறுதிசெய்ய இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியிலான சேவைக்கு வரும்போது, உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், சீனா போன்ற ஒரு சில முன்னணி நாடுகளின் சிறப்புப் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் இணையவுள்ளது.
இது தொடர்பாக, கடந்த மே 22ஆம் தேதி ஆர்டிஎஸ்ஓ வடக்கு ரயில்வேக்கு அனுப்பிய கடிதத்தில் 10 பெட்டிகளைக் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“1,200 கிலோவாட் திறன்கொண்ட, ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் இயங்கும் 10 பெட்டிகள் கொண்ட ‘டெமு’ ரயிலை, வடக்கு ரயில்வேயின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்குவதற்கு ரயில்வே அமைச்சும் ரயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளன,” என்று ரயில்வே வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.

