இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

2 mins read
74a348df-8f17-4a41-b2b8-346df32bcef5
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். - படம்: என்டிடிவி

இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் டீசல் இயந்திரங்களுக்கு மாற்றாக, இந்த ரயில் முற்றிலும் பசுமைத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மேலும் இந்த ரயிலில் இருந்து புகைக்குப் பதிலாக நீராவி மட்டுமே வெளியேறும் என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த ஹைட்ரஜன் ரயில் சேவை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரியானா மாநிலத்தின் ஜிந்த்-சோனிபட் இடையேயான  89 கிலோமீட்டர் வழித்தடத்தில் இந்த அதிநவீன ரயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது.  

‘‘எளிய, நடுத்தர மக்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், இதன் பயணக் கட்டணம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த ரயில் சேவைக்கான குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணம் 25 ரூபாயாகவும் மட்டுமே இருக்கும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 2,600 பயணிகள் தடையின்றிப் பயணம் செய்ய முடியும். 

இதன் மூலம் ஜெர்மனி, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வரிசையில், ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் ஒரு சில முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இது குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ்  தளப் பதிவில், “ரயில்வே துறையில் இந்தியா தூய்மையான தொழில்நுட்பத்தை நோக்கிப் பயணம் செய்வதில் இது ஒரு பெரிய மைல்கல்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

குறிப்புச் சொற்கள்