தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் முதல் நுண்சில்லு இவ்வாண்டு அறிமுகம்

2 mins read
6b5ecf4c-faeb-49dc-90f2-03516ca48097
ஹைதராபாத் கேசவ் நினைவு கல்விச் சங்க நிகழ்வில் பங்கேற்ற மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (இடமிருந்து இரண்டாவது). - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் நுண்சில்லு (செமி கண்டக்டர்) இவ்வாண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்விச் சங்கத்தின் 85வது நிறுவன தினத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், “உலகளவிலான பகுதி மின்கடத்தி நுண்சில்லுத் தொழில்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது,” என்றார்.

“பாதுகாப்பு மிக்க நுண்சில்லுகள் இந்தியாவின் ஹைதராபாத், பெங்களூரு, புனே, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

“நாம் தற்போது பகுதி மின்கடத்தி சில்லுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். நாடு முழுவதும் ஆறு இடங்களில் அதற்கான தொழிற்சாலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டோம். கட்டுமானப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டிற்குள்ளேயே நமது முதல் நுண்சில்லு உலகிற்கு அறிமுகம் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அமைச்சர் வைஷ்ணவ் தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் உலகின் தலைசிறந்த இரண்டு பொருளியல் நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் ஆற்றலை இந்தியா பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதுவரை பொருளியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கத்திய நாடுகள் தற்போது கீழ்மை நாடுகளால் மாற்றம் கண்டு வருகின்றன,” என்றார் வைஷ்ணவ்.

இந்தியாவில் வர்த்தக ரீதியிலான பகுதி மின்கடத்தி தயாரிப்புத் தொழிற்சாலைகள் இதுவரை இல்லாததால் உள்நாட்டுக்கான தேவையைச் சமாளிக்க பெரும்பாலும் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. 

ஆறு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் வருங்காலத்தில் நுண்சில்லு உற்பத்தியில் தன்னிறைவை இந்தியா பெறும் என்றும் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கு குறையும் என்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்