ஸ்ரீ விஜயபுரம்: இந்தியாவின் முதல் திறந்தவெளி கடல் மீன் வளர்ப்புத் திட்டத்தை அந்தமானில் அந்நாட்டின் புவி அறிவியல் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 18) தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் பரந்த கடல் வளங்களை ஆராய்ந்து, நீலப் பொருளியலின் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது எனத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.
மேலும், இந்த முயற்சி இந்தியாவின் பெருங்கடல்களின் பொருளியல் ஆற்றலை வெளிக்கொண்டுவர எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று என்றார் அவர்.
இமயமலை, நிலப்பகுதி ஆகியவற்றில் உள்ள வளங்களைப் போலவே இந்தியக் கடல் பகுதியிலும் ஏராளமான வளங்கள் உள்ளதாக இணையமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பல ஆண்டுகளாகக் கடல் வளங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
கடல்சார்ந்த வளங்கள் மூலம் நாட்டின் செல்வ வளத்தையும் பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பன்முகத்தன்மை கொண்ட பெருங்கடலின் தன்மையை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் மேற்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் இருக்கும் கடல் பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளையும் நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டிய தனித்துவமான பங்களிப்பையும் கொண்டுள்ளன என்றார் அவர்.
இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சின்கீழ் செயல்படும் இத்திட்டம் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடல் மீன், கடற்பாசி ஆகியவற்றின் உற்பத்தியில் இந்த முன்னோடி கவனம் செலுத்தும். மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகளை வாழ்வாதாரத்துடன் இது ஒருங்கிணைக்கிறது.
அந்தமானுக்கான தமது பயணத்தின் ஒரு பகுதியாக, 1983ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டிலேயே முதல் கடல் பூங்காக்களில் ஒன்றான வண்டூருக்கு அருகிலுள்ள மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்காவையும் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்.
அங்குள்ள பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், ஆமைகள் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், பல்வேறு வகையான மீன் இனங்கள் போன்றவற்றையும் இணையமைச்சர் கண்டு ரசித்தார்.


