அமராவதி: இந்தியாவில் முதல் குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) பல்கலைக்கழக வளாகத்தை அமராவதியில் அமைப்பதற்கு ஆந்திரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சின் முழு நிதியுதவியுடன், இந்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தலைநகர வட்டார மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
அமராவதியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இவ்வளாகத்திற்கு, ஐந்து ஆண்டுகளில் ரூ.730.70 கோடி தொகையை 100 விழுக்காடு மத்திய மானியமாக வழங்கப்பட உள்ளது.
புதிய வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், முதற்கட்ட வகுப்புகள் வரும் செப்டம்பரில் குண்டூரில் உள்ள ஆச்சார்ய நாகார்ஜுனா பல்கலைக்கழகத் தற்காலிக வளாகத்தில் தொடங்கவுள்ளன.
அப்பல்கலைக்கழகம் ஏட்டுக் கல்வியுடன், குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், பகுதிமின்கடத்தி உற்பத்தி, உயர் செயல்திறன் கணினியியல் போன்ற நவீனப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகளை வழங்கவுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சமாக 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் குவாண்டம் ஆய்வு, புத்தாக்கப் பிரிவு உருவாக்கப்படும். மாணவர்களும் ஆய்வாளர்களும் புதிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகளை சந்தைப் பொருள்களாக மாற்ற முடியும்.
சூரியசக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, 500 படுக்கைகள் கொண்ட விடுதி வசதியுடன் உருவாகும் அந்த மையம், ஐந்து ஆண்டுகளில் 8,250 பேருக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஸ்ரீ சிட்டி போன்ற முதன்மைக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அமராவதியை நாட்டின் முன்னணித் தொழில்நுட்ப மையமாக மாற்றுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.


