புதுடெல்லி: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான இரட்டைக்குழாய் சாலை, ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அசாமில் பிரம்மபுத்திரா நதியின்கீழ் ரூ.18,662 கோடி செலவில் அந்தச் சுரங்கப் பாதைகளை அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு சுரங்கப் பாதையில் ரயில்களும் மற்றொரு சுரங்கப் பாதையில் வாகனங்களும் இயக்கப்பட உள்ளன.
இது உலகின் இரண்டாவது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாவது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
அசாம் மாநிலம் கோஹ்பூரிலிருந்து நுமலிகர் வரை பிரம்மபுத்திரா நதியின்கீழ் 32 மீட்டர் ஆழத்தில் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவை 33.7 கி.மீ. நீளம் கொண்டதாகவும் 4 வழிப் பாதையாகவும் இருக்கும்.
அவ்வழித்தடங்களில் ஆங்காங்கே செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட உள்ளன.
இது அசாமில் உள்ள கோப்பூர் -நுமாலிகர் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கும்.
முன்னதாக, பிப்ரவரி 14ஆம் தேதி அசாம் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையையும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தார்.

