மும்பை: இந்தியாவில் தங்க முதலீட்டுக்கான தேவை தங்க நகைகளுக்கான தேவையைவிட முதன்முறையாக அதிகரித்துள்ளது. மார்ச் மாத காலாண்டில் இந்தியாவில் அந்த நிலை ஏற்பட்டது.
அதிகமான முதலீட்டாளர்கள் தங்கக் கட்டிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று அனைத்துலகத் தங்க மன்றம் தெரிவித்தது.
இனிவரும் காலாண்டுகளில் தங்க முதலீட்டுக்கான தேவை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் கூறினர்.
வணிக, சில்லறை வர்த்தக முதலீட்டாளர்கள் அதில் அதிக நாட்டம் செலுத்திவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மார்ச் காலாண்டில் முதலீட்டுத் தேவை கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க 52 விழுக்காடு அதிகரித்து 82 மெட்ரிக் டன் ஆனது.
தங்க நகைகளுக்கான தேவை 19.5% சரிந்து 66 டன் ஆனதாக உலக தங்க மன்றம் குறிப்பிட்டது.
இந்தியாவில் ஒட்டுமொத்த தங்க விற்பனை 10.2 விழுக்காடு அதிகரித்து 151 மெட்ரிக் டன்னானது.
இந்தியாவில் விற்பனையான ஒட்டுமொத்த தங்கத்தில் தங்க முதலீடு முதன்முறையாக அதிக பங்கு வகித்தது. கிட்டத்தட்ட 54.3 விழுக்காடு தங்க முதலீடு இந்தியாவில் பதிவானது.

