இந்தியாவின் ‘தங்க நதி’: ஆற்று மணலில் தங்கம் எடுக்கும் மக்கள்

இந்தியாவின் ‘தங்க நதி’: ஆற்று மணலில் தங்கம் எடுக்கும் மக்கள்

2 mins read
வியப்பூட்டும் தகவல்
59db8be1-286c-4f5e-af24-ce9c633a390e
 ‘இந்தியாவின் தங்க நதி’ என்று அழைக்கப்படும் சுவர்ணரேகா நதி.  - படம்: இந்தியாவாட்டர்போர்ட்டல்

புதுடெல்லி: இந்தியாவில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட நதிகள் ஓடுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் என ஒரு தனிச்சிறப்பு உள்ளது.

அந்த வகையில், ஆற்று மணலில் தங்கம் கிடைப்பதால் ‘இந்தியாவின் தங்க நதி’ என்று அழைக்கப்படுகிறது சுவர்ணரேகா நதி.

இந்த நதி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

சமஸ்கிருதத்தில் ‘சுவர்ண’ என்றால் தங்கம், ‘ரேகா’ என்றால் கோடு என்று பொருள்.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள நாக்ரி கிராமத்தில் உருவாகும் இந்த நதி, சுமார் 474 கி.மீ. தூரம் பாய்ந்து ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்கள் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

மற்ற நதிகளைப் போல், இது வேறு எந்தப் பெரிய நதியுடனும் இணையாமல் நேரடியாகக் கடலில் சென்று கலப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

இந்த நதி பாயும் பகுதிகளில் இயற்கையாகவே தங்கம் படிந்த பாறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நதி பாயும்போது ஏற்படும் அரிப்பினால், பாறைகளில் உள்ள மிகச்சிறிய தங்கத் துகள்கள் ஆற்று மணலில் கலக்கின்றன.

ஒரு அரிசியின் அளவைவிடச் சிறிதாகக் கிடைக்கும் இந்தத் தங்கத் துகள்களைச் சேகரிப்பதையே அந்தப் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

இதன் துணை நதியான ‘கர்காரி’யிலும் இத்தகைய தங்கத் துகள்கள் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் மட்டுமின்றி யுரேனியம், தாமிரம் போன்ற கனிம வளங்களும் இந்த நதிப் படுகையில் நிறைந்துள்ளன.

புகழ்பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் 1965ல் இயக்குநர் ரித்விக் கடக் இயக்கிய திரைப்படத்திலும் இந்த நதி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

சுவர்ணரேகா நதியைப் போலவே உலகின் பிற நதிகளும் அவற்றின் சிறப்பால் பெயர்களைப் பெற்றுள்ளன.

வைர நதி (இந்தியா)

கிருஷ்ணா நதி. புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இந்த நதிக்கரையில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில்தான் கண்டெடுக்கப்பட்டது.

மஞ்சள் நதி (சீனா)

ஹுவாங் ஹே நதி. இது மஞ்சள் நிற மண்ணை அதிகளவில் அடித்து வருவதால் இப்பெயர் பெற்றது.

வெள்ளி நதி (தென் அமெரிக்கா)

அர்ஜென்டினா, உருகுவே இடையே பாயும் ‘ரியோ டி லா பிளாட்டா’. ஒரு காலத்தில் இதில் வெள்ளி இருப்பதாக நம்பப்பட்டதால் இந்தப் பெயர் உருவானது.

பருவமழைக் காலங்களில் இந்த நதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, இத்தகைய தாதுக்கள் அதிகளவில் அடித்து வரப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்