பொருளியல் சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி: மோடி பெருமிதம்

பொருளியல் சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி: மோடி பெருமிதம்

படம்: பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா

13 Oct 2026 - 7:49 pm

2 mins read

புதுடெல்லி: உலக அளவில் பொருளியல் சவால்களும் நிலையற்ற சூழலும் நிலவிவரும் போதிலும், இந்தியப் பொருளியல் உறுதியான, நிலையான வளர்ச்சிப்பாதையில் செல்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘ப்ளூம்பெர்க்’ பொருளியல் மன்றத்தில் உரையாற்றிய அவர், 21ஆம் நூற்றாண்டில் அதிகாரத்தின் வரையறை முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் தொழில்நுட்பம், தரவு, அறிவாற்றல் ஆகியவைதான் மிகப்பெரிய அதிகாரங்களாக உருவெடுத்துள்ளன. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைவிட, அது மக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதே முக்கியம் என்று திரு மோடி தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் மின்னிலக்கப் புரட்சியும்

இந்தியாவின் மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறை அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்று என்ற அவர், சாலையோரத் தள்ளுவண்டி வியாபாரி முதல் பெரிய வாகன விற்பனையகத்தின் உரிமையாளர் வரை ஒரே மின்னிலக்கத் தளத்தைப் பயன்படுத்துவது இந்தியாவின் சாதனை என்று கூறினார்.

அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதால் ஊழல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

புதுத்தொழில், சீர்திருத்தங்கள்

2014ஆம் ஆண்டுக்கு முன்பாகச் சில நூறு புதுத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 250,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அவற்றுள் ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் சிறிய நகரங்களில் இருந்தே உருவாகியுள்ளன என்பதும் 45 விழுக்காட்டு நிறுவனங்களில் பெண்கள் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

நாட்டின் தேவைகளுக்கேற்பவும் மக்களின் வசதிக்காகவும் மட்டுமே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். வரி சீர்திருத்தத்தில் ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் இந்தியாவில் உள்ள அளப்பரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஏறத்தாழ 80,000 பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்கள், வெளியீடுகள் உள்ளன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. மேலும், சமூக ஊடகங்களின் இந்த யுகத்தில் இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான யூடியூப் பயனர்கள் உள்ளனர்.

“50 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாம் வெளிப்படையான விவாதங்களை நடத்துகிறோம். மேலும் பொதுமக்கள் அவற்றைப் பற்றி விவாதிக்கின்றனர். இதில் மின்னிலக்கச் சக்தி பெரும் பங்கை ஆற்றியுள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்