125 ஆண்டுகளில் இந்தியாவில் ஆக வெப்பமான ஆகஸ்ட் மாதம்

125 ஆண்டுகளில் இந்தியாவில் ஆக வெப்பமான ஆகஸ்ட் மாதம்

1 mins read
64036b01-e9e4-4c91-8f0f-d635f8bc9aa5
பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான ‘எல் நினோ’ பருவநிலையே இந்த மாறுபட்ட காலநிலைக்கும் மழை பற்றாக்குறைக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.  - கோப்புப் படம்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவிய கடும் வெப்பத்தை அடுத்து, செப்டம்பர் மாதத்திலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு (125 ஆண்டுகளுக்குப் பிறகு) பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆகஸ்ட் மாதமாக இது மாறியுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 0.67 டிகிரி செல்சியஸ் அதிகம்.

பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான ‘எல் நினோ’ பருவநிலையே இந்த மாறுபட்ட காலநிலைக்கும் மழை பற்றாக்குறைக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

எல் நினோ தாக்கம் இந்தியாவில் எதிர்வரும் குளிர்காலம் வரையிலும் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகஸ்ட் 31 நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை 14 விழுக்காடாக உள்ளது. செப்டம்பர் மாதத்திலும் மழை பொய்க்கும் பட்சத்தில், இந்த பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த மழைப் பற்றாக்குறை, சீரற்ற மழைப்பொழிவு நாட்டின் வேளாண் துறையைப் பெரிதும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, குறுவை, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் சாகுபடி பரப்பு குறைய வாய்ப்புள்ளது.

இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வேளாண் உற்பத்தி இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படும் என விவசாய வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்