புதுடெல்லி: இந்தியாவில் 2025-26 நிதி ஆண்டுக்கான பணவீக்கம் 4.3 விழுக்காட்டுக்கும் 4.7 விழுக்காட்டுக்கும் இடையில் நிலைப்படக்கூடும் என்று பிஎல் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த நிறுவனம் வங்கிப் பங்கு முதலீட்டு நிபுணர்களைக் கொண்டது.
2025-26 நிதி ஆண்டில் உணவுப் பொருள்களின் விலை சீராகவும் விவசாய உற்பத்தி நிலையாகவும் இருக்கும் என்றும் அதன் அறிக்கை குறிப்பிடுகிறது.
“உணவுப் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக 2024ஆம் ஆண்டு உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அதிகமாக இருந்தது.
“அந்த ஆண்டில் பணவீக்கம் அதிகரித்ததற்கும் விலைவாசி உயர்ந்ததற்கும் காலநிலை மாற்றம், வெப்ப அலை, கடுமையான மழைப்பொழிவு, விவசாய விளைச்சல் பாதிப்பு ஆகியவை காரணமாக அமைந்தன.
“ஆனால், நடப்பு ஆண்டில் (2025) உணவுப் பொருள்களின் விலையைச் சீர்செய்வதில் விவசாய உற்பத்தி, ராபி பயிர் உற்பத்தி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.
“இந்தியாவின் பணவீக்கத்தை 2 முதல் 6 விழுக்காட்டுக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்வது மத்திய அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. அதன் அடிப்படையில் பணவீக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய ரிசர்வ் வங்கியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
“கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயனீட்டாளர் விலைக் குறியீடு 6 விழுக்காட்டை எட்டியது. உணவுப் பணவீக்கமும் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கமாக அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
“சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவாக உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது.
“தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வட்டி விகிதக் குறைப்பு உள்ளிட்ட நாணயக் கொள்கை மாற்றங்கள் உணவுப் பொருள்களின் விலையை சீராக்கக்கூடும்,” என பிஎல் கேப்பிட்டலின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.