புதுடெல்லி: ரஷ்யத் தயாரிப்பான எஸ்400 அதிநவீன ஏவுகணைக் கவசத்தைப் போன்ற வலுமிகு ஏவுகணைக் கவசம் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. ‘குஷா’ எனப் பெயரிடப்பட்ட அந்த ஏவுகணைக் கவசத்தில் 150 கி.மீ., 250 கி.மீ., 400 கி.மீ., தொலைவு பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்.
அமெரிக்காவின் தாட், ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணை கவசத்துக்கு இணையாக இந்தியாவில் குஷா ஏவுகணை கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. 2028-ம் ஆண்டில் இந்த ஏவுகணை கவசங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.
இந்த ஏவுகணைச் சோதனை வியாழக்கிழமை ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டது. அப்போது தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட வான் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
இது இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த ஏவுகணைக் கவசத்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா வான்வழி வாகனங்கள். எதிரி நாட்டு நவீன விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை, நீண்ட தூரம் மற்றும் உயர வரம்பில் செயலிழக்கச் செய்யும் வகையில் ‘குஷா’ ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆயுத அமைப்பின் ஏவுகணை, ரேடார்கள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கூறுகளும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனை வெற்றி பெற்றதற்காக ‘டிஆர்டிஓ’ அமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
“நீண்ட தூரம் சென்று தாக்கும் தரை, வான் ஏவுகணை அமைப்பின் வெற்றிகரமான உருவாக்கம், இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவை இடம்பெறச் செய்கிறது. இந்தச் சாதனை இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, நாட்டின் பாதுகாப்பையும் கணிசமாக வலுப்படுத்தும்,” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

