போலி சமூக ஊடகப் பக்கங்களைக் கட்டுப்படுத்த இந்தியா உத்தரவு

போலி சமூக ஊடகப் பக்கங்களைக் கட்டுப்படுத்த இந்தியா உத்தரவு

1 mins read
9b4d3970-9acd-4b90-8aa1-62e52dde3fad
அண்மையில் சமூக ஊடகங்களில் கல்வி தொடர்பான பொய்யான, உறுதிசெய்யப்படாத தகவல்கள் பரப்பப்படுவதாக இந்தியக் கல்வி அமைச்சு கூறியது. - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: பொய்த் தகவல்களைப் பரப்பும் போலியான சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து மாணவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில், சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் கல்வி தொடர்பான பொய்யான, உறுதிசெய்யப்படாத தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய கல்வி அமைச்சு கூறியது.

அதனால், மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் அது தெரிவித்தது.

அதன் காரணமாக, போலியான கல்விச் சமூக ஊடகப் பக்கங்களைக் கண்காணித்து, மாணவர்களைக் கவனச் சிதறலிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கல்வித் துறைகளின் சின்னத்துடன் போலியான சமூக ஊடகப் பக்கங்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்கள் திசை திருப்பப்படுவதாக அமைச்சு கூறியது.

“கல்வி ஆலோசகர் என்ற பெயரில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை மூளைச் சலவை செய்து, அவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் செய்கின்றனர்.

“இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்கள், டெலிகிராம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குழுக்களாகச் செயல்பட்டு, தவறான தகவல்களைப் பரப்பி, மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

“இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்,” என்றது அமைச்சு.

போலியான சமூக ஊடகப் பக்கங்களைக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்