தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்தின் மையமாக இந்தியாவின் அண்டை நாடு உள்ளது: ஜெய்சங்கர்

2 mins read
260ee5fc-42d2-4ee3-b7a7-835fdaaba364
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ஊடகம்

நியூயார்க்: உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக இந்தியாவின் அண்டை நாடு உள்ளது என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், பல தலைமுறைகளாக அனைத்துலக அளவில் நிகழ்ந்த முக்கியமான தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டில் இருந்துதான் உருவானதாகக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்க இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியது என்றும் அதன் மூலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தியது என்றும் திரு ஜெய்சங்கர் கூறினார்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா தொடர்ந்து இத்தகையச் சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் சம்பவம் எல்லை தாண்டிய காட்டுமிராண்டித்தனத்தின் அண்மைய உதாரணம் என்றார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இந்தியாவின் உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களையும் உறுதித்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

“பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக தங்களுடைய அரசுக் கொள்கையாக அறிவிக்கும்போது, ​​​​பயங்கரவாதிகள் பகிரங்கமாக ஆதரிக்கப்படும்போது, ​​அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்,” என்றார் திரு ஜெய்சங்கர்.

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றார்.

“பயங்கரவாதிகள் மீதும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியர்களையும் அவர்களின் நலன்களையும் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டப்பட மாட்டாது,” என்று திரு ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்