பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியாவின் புதிய மைல்கல்: மோடி பெருமிதம்

பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியாவின் புதிய மைல்கல்: மோடி பெருமிதம்

2 mins read
097160fd-116d-4e68-97dd-650b198cf4c2
செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு உலகிற்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனை அறிமுகப்படுத்தியதாக பிரதரமர் மோடி கூறியுள்ளார். - படம்: நியூஸ்ஆன்ஏர்

அகமதாபாத்: பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சனந்தில் ‘மைக்ரான் டெக்னாலஜி’ நிறுவனத்தின் பகுதி மின்கடத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகளாவிய பகுதி மின்கடத்தி மதிப்புச் சங்கிலித் தொடரில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் இந்த வளர்ச்சி ஒரு முக்கியமான அம்சம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, அண்மையில் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு உலகிற்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார்.

கடந்த நூற்றாண்டை எண்ணெய் வளம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எனில், இந்த நூற்றாண்டு நுண்சில்லுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் அவர்.

“இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இந்த விழாவும் ஒரு சான்றாகும்.

“மென்பொருள்களுக்கான முதன்மை நாடாக அறியப்பட்டிருந்த இந்தியா, வன்பொருள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் உலகில் அடியெடுத்து வைப்பதற்கான மாற்றத்தை இந்த நாள் குறிக்கிறது,” என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

மனிதகுலத்திற்கான உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதில், இந்தியாவும் அமெரிக்காவும் பங்காளித்துவத்தைக் கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக சில்லு தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதே அந்தப் பங்காளித்துவத்துக்கான அடையாளச் சின்னம் என்றார் திரு மோடி.

“இந்தியா, அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருந்து வணிக உற்பத்தியைத் தொடங்குவது வரை இந்தப் புதிய ஆலையின் விரைவான முன்னேற்றம், உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது.

“இந்தியா தற்போது தயாராக உள்ளது. இந்தியா நம்பகமான நாடு. இந்தியா சொன்னபடி செய்கிறது என்பதே அந்தச் செய்தி,” என்றார் பிரதமர் மோடி.

இந்தியா தன்னைத் திறமையான நாடாகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் நிரூபிக்கும் இந்தக் காலகட்டம் இந்திய இளையர்களுக்கு நல்லதொரு திருப்புமுனையைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்