இந்தியாவின் மருந்தியல் துறை 2030ஆம் ஆண்டின் இலக்கை தவறவிடக்கூடும்

இந்தியாவின் மருந்தியல் துறை 2030ஆம் ஆண்டின் இலக்கை தவறவிடக்கூடும்

2 mins read
de4e2949-ca18-4df6-874a-fc1bf58e8ff2
மத்திய கிழக்குப் பூசல், அமெரிக்காவின் வரி விதிப்பு, கப்பல் போக்குவரத்துப் பாதிப்பு போன்றவற்றால் இந்தியாவின் மருந்தியல் துறை விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை, மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதிப்புகள் போன்றவற்றால் 2030ஆம் ஆண்டின் விற்பனை இலக்கை இந்தியாவின் மருந்தியல் துறை தவறவிட வாய்ப்புள்ளதாக அரசு ஆதரவு பெற்ற வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.

இது பற்றி விளக்கமளித்த இந்திய மருந்தியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் தலைவரான நமித் ஜோஷி, இத்துறை 2030க்குள் $80 பில்லியன் முதல் $90 பில்லியன் டாலரை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

இது, கடந்த ஆண்டு ஏப்ரலில் நிர்ணயிக்கப்பட்ட $130 பில்லியன் டாலர் என்ற இலக்கை விட மிகவும் குறைவாகும்.

மார்ச் 2026ல் முடிவடைந்த நிதியாண்டில் இத்துறையின் சந்தை மதிப்பு சுமார் $60 பில்லியன் டாலராக இருந்தது என்றும் இதில் ஏறக்குறைய $31 பில்லியன் டாலர் ஏற்றுமதியும் $29 பில்லியன் டாலர் உள்நாட்டு விற்பனையும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

“கடந்த ஆண்டு ஏப்ரலில் சந்தையின் அளவை இரட்டிப்பாக்க இலக்கு கொண்டிருந்தோம், தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்கள், மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் பிற சூழல்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, அந்த வளர்ச்சி இலக்கை நாம் அடைவோம் என்று நான் நினைக்கவில்லை,” என்று கடந்த வாரம் அளித்த பேட்டியில் ஜோஷி தெரிவித்தார்.

உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அமெரிக்காவிற்கு ‘ஜெனரிக்’ மருந்துகளை விநியோகிக்கும் முதன்மை நாடாக உள்ளது. 2022ல் அமெரிக்காவில் விநியோகிக்கப்பட்ட மொத்த ஜெனரிக் மருந்துகளில் பாதியை இந்தியா வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் ஆகஸ்ட் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பூஜ்யம் விழுக்காடு வரி தொடரும் என்றும், அதற்குப் பிறகு ஒரு ஆண்டிற்கு 100% ஆகவும், பின்னர் 200% ஆகவும் வரி உயர்த்தப்படும் என்றும் கடந்த மாதம் தெரிவித்தார்.

பிரேசில், ஐரோப்பாவின் தேவை காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து ஏற்றுமதி 2.13% உயர்ந்த போதிலும் மார்ச் 2026ல் முடிந்த நிதியாண்டில் அமெரிக்காவிற்கான மருந்து ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $10.5 பில்லியன் டாலரிலிருந்து $9.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என்று ஜோஷி கூறினார்.

குறிப்புச் சொற்கள்