தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1.46 பில்லியனை நெருங்கும் இந்திய மக்கள்தொகை; குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவு

2 mins read
d3f82579-5dcd-4e36-8558-081618c1d322
2025ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ஆண்களுக்கான ஆயுட்காலம் 71 ஆண்டுகள், இந்தியப் பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: இந்தியாவின் மக்கள்தொகை இவ்வாண்டு 1.46 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது உலகிலேயே ஆக அதிகம்.

இத்தகவல் ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ஐநா) வெளியிட்ட புதிய மக்கள்தொகை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் மொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவதால் பதற்றம் அடைவதற்குப் பதிலாக இனப்பெருக்க இலக்குகள் எட்டப்படாததற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.

மில்லியன் கணக்கானோரால் தங்களுடைய இனப்பெருக்க இலக்குகளை அடைய முடியவில்லை என்று அது கூறியது.

இதுவே உண்மையான பிரச்சினை என்று தெரிவிக்கப்பட்டது.

குறைந்த மக்கள்தொகை அல்லது அளவுக்கு அதிகமான மக்கள்தொகை பிரச்சினை அல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலியல் உறவு, கருத்தடை, மகப்பேறு தொடர்பாக முடிவெடுக்க மக்களுக்குத் தேவையான தகவல் எளிதில், இலவசமாகச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்படுவதே அதற்குத் தீர்வாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மக்கள்தொகை தொடர்பான அம்சங்கள், குழந்தைப் பிறப்பு விகிதம், ஆயுட்காலம் ஆகியவற்றில் பேரளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறிக்கை சுட்டியது.

இந்தியாவின் மொத்த குழந்தைப் பிறப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைப் பிறப்புகள் எனக் குறைந்துள்ளது.

அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, மாண்டோரின் எண்ணிக்கையைவிட குறைவாக இருப்பதைத் தவிர்க்க ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைப் பிறப்புகள் என்று இருக்க வேண்டும்.

எனவே, இந்தியாவின் மக்கள்தொகை குறையாமல் இருக்க குழந்தைப் பிறப்பு விகிதம் போதுமான அளவில் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதற்குத் தேவையானதைவிட குறைவான குழந்தைகளை இந்தியப் பெண்கள் பெற்றெடுப்பதாக அறிக்கை தெரிவித்தது.

இந்தியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளபோதிலும் அந்நாட்டில் இளையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பேரளவில் உள்ளது.

மக்கள்தொகையில் 24 விழுக்காட்டினர் 0 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்; 17 விழுக்காட்டினர் 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்; 26 விழுக்காட்டினர் 10 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

பணிபுரியும் வயதில் (15 முதல் 64 வரை) இருப்பவர்கள் இந்திய மக்கள்தொகையில் 68 விழுக்காட்டினர்.

65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதம் ஏழு விழுக்காடாகும்.

ஆயுட்காலம் அதிகரிப்பதால் இந்த விகிதம் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ஆண்களுக்கான ஆயுட்காலம் 71 ஆண்டுகள், இந்தியப் பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.4639 பில்லியனாகப் பதிவாகி உள்ளது என்று ஐநா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்