புதுடெல்லி: இந்தியாவின் எழுச்சி, மற்றவர்களின் தவறுகளால் தீர்மானிக்கப்படாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியானது, அதன் சுயவலிமையால் தீர்மானிக்கப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற ‘கடல்களின் இதயம்: இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சீஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
“இந்தியாவின் எழுச்சிக்கான திசை மிகத் தெளிவாகத் தெரிகிறது. யாராலும் தடுக்க முடியாததாகவும் உள்ளது.
“இந்தியாவின் வளர்ச்சியால் இந்தியப் பெருங்கடலின் நாடுகள் பயனடையும். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் நாடுகள் அதிக நன்மைகளைப் பெறும்,” என்றார் டாக்டர் ஜெய்சங்கர்.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது என்றும் பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு கலாசாரம், அரசியல் உத்திகளின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்த வளர்ந்த நாடுகள், தற்போது தங்களுக்குள் வேறுபாடுகளைக் காட்டத் துவங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, அனைத்துலக அரசியல் என்பது இனி ஒருசில சக்திவாய்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட தேவை, விவகாரங்களுக்கு மட்டும் தற்காலிகமான பங்காளித்துவத்தை சில நாடுகள் உருவாக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒருசில நாடுகள் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு பிற நாடுகள் அதற்கு கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என்பதெல்லாம் பழைய நடைமுறை. இனி அது திரும்பாது.
“அதிகாரப் பரவலுக்கு ஏற்பவே அனைத்துலக ஒத்துழைப்பு என்பது அமைய வேண்டும். அதுவே தற்போதைய நிலை. இதை யாரும் எதிர்க்கக் கூடாது,” என்றார் ஜெய்சங்கர்.

