புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடைமானம் வைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பேசுவதற்குத் தமக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பு பறிபோய்விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் வரவு, செலவு அறிக்கை மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவின் ஆதிக்கத்தை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கின்றன என்றும் போர் சூழல் ஓய்ந்துவிட்டது என்று பிரதமர் மோடி கூறுவது தவறானது என்றும் கூறினார்.
கொள்கைகளைத் தீர்மானிப்பதில் கணிக்க முடியாத தன்மைக்கு பெயர் பெற்ற அதிபர் டிரம்பைக் கையாள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்குக்கு இந்தியா இசைவு தெரிவித்தது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது என்றும் பாரத அன்னையை இந்திய அரசு விற்றுவிட்டது என்றும் ராகுல் காந்தி காட்டத்துடன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தித் துறையில் இந்தியாவின் பாதுகாப்பு பறிபோய்விட்டதாகவும் இதன்மூலம் இந்தியாவையே விற்றுவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“இந்தியாவின் ஜவுளித்துறையை பங்ளாதேஷ் அழிக்கப் போகிறது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும்,” என்றார் ராகுல் காந்தி.
‘ஏஐ’ தொழில்நுட்பத்திற்கு முக்கியமான தூணாக இருக்கும் தரவுகளை வர்த்தக ஒப்பந்தம் மூலம் இலவசமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க இந்திய அரசு வழிசெய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதானி வழக்கை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்து அமெரிக்கா நினைத்ததைச் சாதித்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

