பங்ளாதேஷுக்கு நாடுகடத்தப்பட்ட அறுவரை மீண்டும் அழைத்துவர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்து

2 mins read
819974bb-6fed-48c4-bacc-95699fa88c36
இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களை வைத்திருந்த நிலையில் அறுவரை நாடுகடத்தியது அடிப்படை உரிமைமீறல் என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: கள்ளக் குடியேறிகள் எனக் கூறி, பங்ளாதேஷுகு நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணி சுனாலி கத்துன், அவரின் கணவர் டானிஷ் சேக், மகன் சபீர் உள்ளிட்ட அறுவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும் என இந்திய அரசாங்கத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு அழைத்து வந்தபின் குடியுரிமை தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தலாம் என்றும் அது ஆலோசனை தெரிவித்துள்ளது.

சுனாலி உள்ளிட்ட அறுவரிடமும் இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்கள் உள்ளன என்றும் அவர்களை நாடுகடத்தியது அடிப்படை உரிமைமீறல் என்றும் அவர்களின் தரப்பில் வாதாடிய கபில் சிபல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

“கோல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த அறுவரையும் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும்,” என்றும் அவர்கள் வாதாடினர்.

பின்னர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வின்முன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) இவ்விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் கருத்துரைத்த நீதிபதிகள் அமர்வு, “நிலச்சொத்து ஆவணங்கள், உறவினர்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாடுகடத்தப்பட்ட அறுவரையும் மீண்டும் ஏன் இந்தியாவிற்கு அழைத்துவரக்கூடாது? அவர்களை நாடுகடத்துமுன் எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

“இடைக்கால நடவடிக்கையாக, அவர்களை மீண்டும் இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துவந்து, விசாரணை நடத்துங்கள். அவர்களோ அவர்களின் சார்பிலோ தாக்கல் செய்யும் ஆவணங்களை ஆராயுங்கள். தங்கள் குடியுரிமையை மெய்ப்பிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்,” என்று கூறினர்.

அதே நேரத்தில், கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறிய பங்ளாதேஷியரை வெளியேற்றியது முற்றிலும் நியாயமானதுதான் என்றும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

சுனாலி கத்துன் உள்ளிட்டோர் விவகாரத்தில் டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமைக்குள் மத்திய அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்